பில்லி சூனியம்: 5 பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொன்று புதைப்பு

புதன், 25 பிப்ரவரி 2015 (17:13 IST)
மேகாலயா மாநிலத்தில் பில்லி சூனியம் வைத்ததாகக் கூறி 5 பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டுள்ளனர், அவர்களின் உடல்களை தோண்டியெடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மேகாலயாவிலுள்ள மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் குக்கிராமமான மிரிக்ரே கிராமத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கடந்த மாதம் திடீரென காணாமல் போயினர்.
 
இது குறித்து அவர்களில் ஒருவரின் உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 
 
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 பேரிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் அவர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றனர். 
 
இந்த விசாரணையில், காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாஜிஸ்திரேட், மற்றும் இரண்டு மருத்துவர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 
 
கொலை செய்யப்பட்ட இந்த 5 பேரின் கைகளும் பின்பக்கமாக கட்டப்பட்டிருந்தன. அவர்களின் உடல்களில் கடுமையான காயங்கள் இருந்தன. இதனால், சூனியம் வைத்ததாக கூறி சித்ரவதை செய்து அவர்களை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது. 
 
இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
 
கொலை செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்