பேஸ்புக்கை முடக்கியதற்கு மலையாள நடிகை அருந்ததி கண்டனம்

புதன், 5 ஆகஸ்ட் 2015 (11:54 IST)
யாகூப் மேமனுக்கு தூக்கிலிட்டது தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக, தனது பேஸ்புக் கணக்கை முடக்கியது கண்டிக்கத்தக்கது என்று மலையாள நடிகை அருந்ததி தெரிவித்துள்ளார்.
 

 
மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியாக கருதப்பட்ட யாகூப் மேமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்கிலிடப்பட்டார். இதற்கு, மனித உரிமை ஆர்வலர்களும், அறிவுஜீவிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால், யாகூப் மேமன் தூக்குத் தண்டனைக்கு எதிராக பேஸ் புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்பட சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று மத்திய அரசு எச்சரித்திருந்தது. சமூக வலைத்தளங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்கவும் செய்தது.
 
இதனிடையே பிரபல மலையாள நடிகையான அருந்ததி, யாகூப் மேமன் தூக்குத் தண்டனைக்கு எதிராக தனது பேஸ்புக்கில் சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அருந்ததியின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
 
தனது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதற்கு, நடிகை அருந்ததி கண்டனம் தெரிவித்துள்ளார். “பேஸ்புக் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தேவையில்லாத நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தை அபகரிக்கும் முயற்சி நடைபெறுகிறது” என்று அருந்ததி கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்