வக்கீலுக்கு கொடுக்க காசு இல்லை ; ஜாமீன் ரத்து செய்யுங்க; ஜெயில்ல போடுங்க : அதிகாரி மனு

புதன், 17 ஆகஸ்ட் 2016 (11:45 IST)
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் இருக்கும், நிலக்கரி துறை முன்னாள் செயலர் குப்தா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நிலக்கரி சுரங்க உரிமத்தை முறைகேடாக பெற்றதாக, மத்திய பிரதேசத்தில் உள்ள கமல் ஸ்பான்ஞ் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி நிலக்கரி துறை முன்னாள் செயலர் குப்தா என்பவர் மீது வழக்கு தொடர்ப்பட்டிருந்தது.
 
அவர் தற்போது ஜாமீன் பெற்று இந்த வழக்கை சந்தித்து வருகிறார். இந்நிலையில், தனது ஜாமீனை ரத்து செய்யக்கோரி,  அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
அதில் “நிலக்கரி ஊழல் தொடர்பாக என் மீது 8 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளை நடத்த, வழக்கறிஞர்களுக்கு என்னால் பணம் கொடுக்க முடியவில்லை. எனவே என் ஜாமீனை ரத்து செய்து சிறைக்கு அனுப்புங்கள். நான் சிறையிலிருந்தே வழக்குகளை சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
அவரின் மனுவை விசாரித்த நீதிபதி, டெல்லியில் உள்ள இலவச சட்ட மையத்தின் உதவியை பெற வலியுறுத்தியது. ஆனால் குப்தா அதை தவிர்த்து விட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்