சந்திரபாபு நாயுடு தொலைபேசி ஒட்டுகேட்பு: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீதான வழக்கு சிஐடிக்கு மாற்றம்

செவ்வாய், 16 ஜூன் 2015 (22:12 IST)
தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவ் மீதான கிரிமினல் வழக்கு விசாரணை சிஐடி காவல்துறை வசம் மாற்றப்பட்டுள்ளது.
 
தெலுங்கானாவில் மேல்சபை தேர்தலின் போது, அம்மாநில நியமன எம்எல்ஏக்கு, தெலுங்கு தேச எம்எம்ஏ லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுந்த புகாரில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கும் இடையே மோதல் வெடித்தது.
 
அடுத்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலுங்கானா நியமன எம்எல்ஏ ஸ்டீபன்சன் பேசியதாக, தொலைபேசி உரையாடல் டேப் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனால், ஆவேசம் அடைந்த ஆந்திர முதலமமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி சென்று, தனது தொலைபேசி உரையாடலை தெலுங்கானா அரசு ஒட்டு கேட்பதாக , பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் தெரிவித்தார்.
 
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தொலைபேசி உரையாடலை, சட்ட விரோதமாக ஒட்டு கேட்டதாக, சத்திய நாராயணபுரம் காவல் நிலையத்தில், ஜெருசலேம் முத்தையா என்பவர் புகார் அளித்தார். அதன் பேரில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீது ஆந்திர காவல்துறையினர் கடந்த 8 ஆம் தேதி கிரிமினல் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இந்நிலையில், இந்த வழக்கு சிஐடி காவல்துறை வசம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆந்திர அரசு இன்று வெளியிட்டது. இதனால், சந்திரபாபுவுக்கும், சந்திர சேகர் ராவ் இடையே மோதல், மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்