தேர்தல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:00 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் நடத்திய தேர்தல் வெற்றி விழா ஊர்வலத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.


 

 
உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நபீசா என்ற சமாஜ்வாதி கட்சி வேட்பாளரின் வெற்றியை கொண்டாடும் வகையில் கைரானா நகரின் வழியாக அக்கட்சியினர் ஆரவாரத்துடன் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென தனது கைத்துப்பாக்கியை எடுத்து, கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்.
 
அப்போது, அந்த அவ்வழியாக ரிக்‌ஷாவில் சென்ற சமி என்ற எட்டுவயது சிறுவனின் உடலில் ஒரு குண்டு பாய்ந்தது. இதனால், ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த அந்த சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து தேர்தலில் வெற்றிபெற்ற நபீசாவின் கணவர் உள்ளிட்ட சிலர்மீது வழக்குப்பதிவு செய்ப்பட்டுள்ளது.
 
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்ட தலைமறைவான  நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில், உயிரிழந்த சிறுவனின் மரணத்திற்கு நீதிகேட்டு, அவனது பெற்றோர்,  உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சாலையில் வந்து அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்