'காஷ்மீருக்காக பெருந்தன்மையுடன் நிதி அளிப்பீர்': நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (19:47 IST)
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டு மக்கள் பெருந்தன்மையுடன் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
"எனது சக மக்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், ஜம்மு - காஷ்மீரில் எதிர்பாராத அளவுக்கு பெருவெள்ளம் ஏற்பட்டு, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நிறைய எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது, பலர் தங்கள் இருப்பிடத்தை இழந்துள்ளனர்.
 
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களும் உள்கட்டமைப்புகளும் அழிந்து போயுள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு இத்தகைய நெருக்கடி நிலையில், அவர்கள் வாழ்க்கை மீண்டும் புனரமைக்கப்பட நமது உதவி பெரிதும் தேவைப்படுகிறது.
 
எனவே, பாதிக்கப்பட்ட நமது சகோதரர், சகோதரிகளுக்கு இத்தகைய நெருக்கடி தருணத்தில் தோள் கொடுப்பது நமது கடமையாகும். ஆகவே, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் அனைவரும் பெருந்தன்மையுடன் நிதியளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மோடி. 
 
இதற்கான தொகையை காசோலை, டிராஃப்ட் அல்லது ரொக்கம் ஆகிய முறைகளில் அனுப்பலாம். பிரதமர் அலுவலக இணையதளம் மூலமும் நிதியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இதற்காக டிராஃப்ட் எடுத்தால் எந்த விதக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிரதமர் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் ஒருநாள் சம்பளத்தை ஜம்மு - காஷ்மீர் நிவாரணத்திற்காக அளித்ததையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்