தினகரனை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை: நீதிபதி கேள்வி?

செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (15:53 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் இரண்டு அணிகளும் உரிமை கொண்டாடியதை அடுத்து தேர்தல் ஆணையம் அதனை தற்காலிகமாக முடக்கியது.
 
இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை டெல்லி போலீசார் 1.30 கோடி ரூபாய் பணத்துடன் கைது செய்தனர். அதன் பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சுகேஷ் மூலம் தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதும், 60 கோடி ரூபாய் பேரம் பேசியதும் தெரியவந்தது.
 
இது தொடர்பாக தினகரனுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டிய காவல் துறை தினகரனுக்கு நேரில் சென்று சம்மன் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதனையடுத்து தினகரனிடம் கடந்த மூன்று நாட்களாக பல மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர் டெல்லி காவல்துறையினர்.
 
இந்நிலையில் டெல்லி போலீஸ் தினகரன், சுகேஷுடன் பேசிய தொலைப்பேசி ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாகவும், இதனை பார்த்த நீதிபதிகள் தினகரனை ஏன் இன்னமும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்