மத்திய அரசுடன் சண்டைபோட விரும்பவில்லை - கேஜ்ரிவால் பரபரப்பு பேச்சு

திங்கள், 25 மே 2015 (22:55 IST)
நாங்கள், மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். அவர்களிடம், தேவையின்றி சண்டைபோட விரும்பவில்லை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்து 100 நாட்கள் ஆனதை முன்னிட்டு, கன்னாட் பிளேஸ் பூங்காவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது, ஆம் ஆத்மி அரசின் 100 நாள் சாதனைகள் குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-
 
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை 80 சதவீதம் அளவில் ஊழல் குறைந்து உள்ளது. அதிகாரிகளின் கடும் உழைப்பால் தான் இது சாத்தியானது. மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க, விரைவு நீதிமன்றங்கள் தேவை. அதனை விரைவில் அமைக்க உரிய நவடிக்கை எடுக்கப்படும்.
 
சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக கட்சியால், அதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் டெல்லியில் பலவித குழப்பங்கள் நடைபெற்றது.
 
இருப்பினும், நாங்கள், மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணைந்து செயல்படவே  விரும்புகிறோம். அவர்களிடம் தேவையின்றி சண்டை போட விரும்பவில்லை என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்