சாகப்போவதாக மோடியை மிரட்டிய தேவகவுடா!

செவ்வாய், 25 அக்டோபர் 2016 (14:36 IST)
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் பல்டியடித்த மத்திய அரசு இரண்டு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட அதிகாரம் இல்லை என புதிய குண்டை துக்கி போட்டு அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.


 
 
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா காவிரி பிரச்சனைக்காக தாம் சாகப் போவதாக பிரதமர் மோடியை மிரட்டியதாக கூறியுள்ளார்.
 
இது குறித்து பேசிய தேவகவுடா, காவிரி பிரச்சனை முடிந்துவிடவில்லை. நம்முடைய தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கத்தி தற்போது விலகியிருக்கிறது அவ்வளவுதான். நமக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்தின் விவசாயத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது சரியானது அல்ல.
 
இந்த உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்பதற்காக நான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது பிரதமர் அலுவலக அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்களிடம், நான் காவிரி பிரச்சனைக்காக 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து சாகப் போகிறேன். 3-வது நாள் என்னுடைய உடலுக்கு பிரதமர் மோடி வந்து அஞ்சலி செலுத்தட்டும் என மிரட்டினேன். அதனால்தான் காவிரி பிரச்சனையில் மோடி தலையிட்டார் என தேவகவுடா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்