நிர்பயா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்புவதைத் தடுக்க நடவடிக்கை: ராஜ்நாத் சிங் உறுதி

புதன், 4 மார்ச் 2015 (13:11 IST)
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட, நிர்பயா குறித்த ஆவணப்படம் ஒளிபரப்புவதை தடுக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
 
தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த நிர்பயா ஒரு கொரூர கும்பலால் கற்பழிக்கப்பட்டு, சாலையோரம் வீசப்பட்டார். உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்.
 
இந்தக் கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவனான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர், இந்தியாவின் மகள் என்ற ஆவணபடத்திற்காக பேட்டி கண்டார்.
 
இந்நிலையில், குற்றவாளியின் அந்தப் பேட்டியை ஆவணப்படமாக தயாரித்துள்ள லெஸ்லி, உலக பெண்கள் தினமான வரும் 8 ஆம் தேதி தேதியன்று, பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார். 
 
இந்நிலையில் குற்றவாளி அளித்த பேட்டி ஊடகங்களில் வெளியானது. இது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. கொடூரமான கொலை குற்றவாளியிடம் எப்படி பேட்டி எடுக்க, திகார் சிறை அதிகாரிகள் அனுமதி வழங்கினர் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
 
இந்நிலையில் இந்த ஆவணப்படம் குறித்து விவாதிக்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி நோட்டீஸ் அளித்தார்.
 
இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் கேட்டுக்கொண்டனர்.
 
இதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்புவதை தடுக்க சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
 
மேலும்,  குற்றவாளியிடம் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்