டில்லி மாணவி நிர்பயா கற்பழிப்பு வழக்கில் இளம் குற்றவாளி வெளியாவதில் சிக்கல்

திங்கள், 14 டிசம்பர் 2015 (16:08 IST)
டில்லியில் ஒடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு பின் மருத்துவமனையில் மரணமடைந்த பெண்ணின் வழக்கில், முக்கிய குற்றவாளியான சிறுவன் சீர் திருத்தப் பள்ளியில் இருந்து விடுதலை ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.


 
 
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், குற்றச் செயலில் ஈடுபட்டதாக கூறி மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.
 
அதில் ஒரு குற்றவாளியின் வயது 17 ஆக இருந்ததால் அவனுக்கு மூன்று வருடம் மட்டும் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலத்தில் அவன் சிறார் சீர் திருத்தப் பள்ளியில் இருந்தான். இப்போது தண்டனைக் காலம் முடிய உள்ளதால், அவன் விடுதலையாக உள்ளான் என்ற தகவல் வெளியானது.
 
இந்நிலையில், அவன் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடுவான் என்பதால் அவனை சுதந்திரமாக நடமாட விடக்கூடாது என பலியான மாணவியின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். அவனை விடுதலை செய்யவே கூடாது. விடுதலை செய்வதானால், நிச்சயமாக அவனது முகத்தை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
 
மேலும், அவன் முழுமையாக திருந்தி விட்டான் என்பது உறுதியாகும் வரை மற்றும் அவனால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பது தெளிவாகும் வரை அவனை விடுதலை செய்யக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான சுப்பிரமணிய சுவாமி டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
வருகிற 20ஆம் தேதி அவன் விடுதலை ஆக உள்ளதால், இந்த வழக்கின் தீர்ப்பை 20ஆம் தேதிக்குள் நீதிபதிகள் வழங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 20 ஆம் தேதிக்கு மேல் அவனை காப்பகத்தில் அடைத்து வைக்க முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்