சோனியாவுக்கு எதிரான புகார் தொடர்பாக 6 மாதத்திற்குள் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு

புதன், 27 ஆகஸ்ட் 2014 (19:16 IST)
சோனியா காந்திக்கு எதிரான புகார் தொடர்பாக 6 மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
காங்கிரஸ், பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 தேசிய கட்சிகளும் தகவல் அறியும் உரிமைச் சட்ட (ஆர்.டி.ஐ..) வரம்புக்கு உட்பட்டவை என்று மத்திய தகவல் ஆணையம் அறிவித்தது.
 
இதனடிப்படையில் தகவல் ஆர்வலரான ஆர்.கே.ஜெயின் என்பவர் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி மனு அனுப்பியிருந்தார். அந்த மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் எடுத்த நடவடிக்கை மற்றும் இது தொடர்பான மனுக்களுக்கு பதில் அளிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குறித்து தகவல் கேட்டிருந்தார். ஆனால், அந்த மனுவைப் பெற காங்கிரஸ் கட்சி அலுவலகம் மறுத்ததுடன், அதை மனுதாரருக்கே திரும்பி அனுப்பிவிட்டது.
 
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிரான புகார் மனுவுடன், மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார் ஜெயின். இதுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சோனியா காந்தி மீது புகார் கொடுப்பது தொடர்பாக தகவல் ஆணையம் 6 மாதத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்