டெல்லியில் மாணவி குத்திக் கொலை: 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய கெஜ்ரிவால் அரசு உத்தரவு

ஞாயிறு, 19 ஜூலை 2015 (10:04 IST)
டெல்லியில் மாணவி 35 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 2 நாளில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று டெல்லி காவல்துறை ஆணையருக்கு டெல்லிஉள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.
 
 டெல்லியைச் சேர்ந்தவர் மீனாட்சி என்ற 11 ஆம் வகுப்பு மாணவி. இவரை ஜெய்பிரகாஷ், அஜய் என்னும் 2 சகோதரர்கள் பின்தொடர்ந்து சென்று, கிண்டல் செய்வது வழக்கம். 
 
இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி மீனாட்சி, இரண்டு சகோதரர்களும் வழக்கம்போல கிண்டல் செய்தனர். இதற்கு மீனாட்சி எதிர்ப்பு தெரிவித்தபோது, ஆத்திரம் அடைந்த அவர்கள் மீனாட்சியை கத்தியால் 35 முறை குத்தினர்.
 
இதனால், மீனாட்சி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அப்போது, இதைத் தடுக்க முயன்ற அவரது தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது.
 
இந்த சம்பவம் சுமார் 50 பேர் முன்னிலையில் நடந்ததாகவும் ஆனால் இதை யாரும் தடுக்க முன்வரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
 
இதைத் தொடர்ந்து காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மீனாட்சி உயிரிழந்தார்.
 
உயிரிழந்த மாணவி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், ஜெய்பிரகாஷ், அஜய் தொடர்ந்து கிண்டல் செய்து வருவது குறித்து பல முறை புகார் செய்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்தும் , மாணவி புகார்கள் அளித்தும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது குறித்தும் 2 நாளில் விரிவான விளக்க அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ். பாஸிக்கு டெல்லிஉள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்