டெல்லியில் டாக்டர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: அமைச்சர் சத்யேந்திர ஜெயின் எச்சரிக்கை

செவ்வாய், 23 ஜூன் 2015 (23:19 IST)
டெல்லியில், அரசு அறிவிப்பை ஏற்று, டாக்டர்கள் உடனே பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என டெல்லி சுகாதரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொது மக்களின் உயிர் காக்கும் மருந்துகளைப் போதிய அளவு வழங்க வேண்டும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், பணி நேரம் அறிவிக்க வேண்டும், முறையான ஊதியம் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
மத்திய, மாநில மற்றும் டெல்லி மாநகராட்சியைச் சேர்ந்த 20 அரசு மருத்துவ மனைகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனால், கடந்த இரு நாட்களாக அரசு மற்றும் மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் பெரும் துன்பம் அடைந்தனர். மேலும், அவசர சிகிச்சை பிரிவும் பாதிக்கப்பட்டது.
 
இதையடுத்து, அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் மீது எஸ்மா சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
 
இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், அரசு டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டாக்டர்களின் உணர்வுகளை  மதித்து, அவர்களது கோரிக்கைகள் மூன்று மாதத்தில் நிறைவேறப்பட்டும்.
 
தற்போது, டாக்டர்கள் போராட்டம் காரணமாக, அவசரச் சிகிச்சைப் பிரிவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல மருத்துவ மனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் இயங்கவில்லை. இது வேதனை தரும் விஷயமாகும். நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமையாகும்.
 
எனவே, டாக்டர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், இந்த அறிவிப்பை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் டாக்டர்கள் மீது ‘எஸ்மா’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்