அரசுகள் மற்றும் கட்சிகளின் கொள்கைகள் பற்றி விமர்சிக்கும் உரிமை மாணவர்களுக்கு உள்ளது: தேசிய தலித் ஆணையம்

செவ்வாய், 9 ஜூன் 2015 (17:51 IST)
அரசுகள் மற்றும் கட்சிகளின் கொள்கைகள் பற்றி அறிவுசார்ந்த முறையில் விமர்சிக்கும் உரிமை மாணவர்களுக்கு உள்ளது என்று தேசிய தலித்துகள் ஆணையத்தின் தலைவர் பி.எல்.பூனியா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில், மாணவர்கள் சார்பில் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியை விமர்ச்சனம் செய்ததாக கூறி, இந்த அமைப்புக்கு சென்னை ஐஐடி தடை விதித்தது.
 
இதற்கு, திமுக, மதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல்வேறு சமுக அமைப்புகளும் சென்னை ஐஐடியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தின. இதனால், அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐஐடி நிர்வாகம் விலக்கிக் கொண்டது.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு தேசிய தலித்துகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
 
இதனையடுத்து, டெல்லியில் உள்ள, தேசிய தலித்துகள் ஆணையத்தின் தலைவர் பி.எல்.பூனியா முன்னிலையில் பாஸ்கர் ராமமூர்த்தி ஆஜராகி விளக்கம் அளித்தார்.
 
இது குறித்து, தேசிய தலித்துகள் ஆணையத்தின் தலைவர் பி.எல்.பூனியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னை ஐஐடி மாணவர் அமைப்பின் மீதான தடை தொடர்பாக அதன் நிர்வாகம்  எழுத்துப் பூர்வமாக அறிக்கை கொடுத்தனர். இந்த விஷயத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கருத்து கேட்டு, கடிதம் மட்டுமே எழுதிய நிலையில், அவசர கோலத்தில் மாணவர் அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை தவறானது.
 
மேலும், சென்னை ஐஐடி அளித்த அறிக்கை முழுமையாக இல்லை. எனவே, கூடுதல் விவரங்களுடன் அறிக்கையை அளிக்குமாறு கேட்டுள்ளேன். 
 
அரசியல் கட்சிகள், மற்றும் அரசுகள் அல்லது அதன் கொள்கைகள் பற்றி அறிவுசார்ந்த முறையில் விமர்சிக்கும் உரிமை மாணவர்களுக்கு உள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்