மதத்தால் பிரித்துவைக்கப்பட்ட காதலர்களை சேர்த்து வைத்த உயர்நீதிமன்றம்

புதன், 25 நவம்பர் 2015 (15:49 IST)
திருமணம் செய்த காதல் ஜோடியை உறவினர்கள் மதத்தின் பெயரால் பிரித்து வைத்தனர். அவர்களை மும்பை உயர்நீதிமன்றம் சேர்ந்து வைத்துள்ளது.
 

 
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் சோகன்லால். இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆயிஷா குரோசி என்கிற ஆஷா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அவரும் இவரது காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
இதனால், இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஜுன் மாதம் இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
 
இந்நிலையில் ஆஷாவின் சகோதரர்கள் இவர்களிடம் வந்து, தாய் -தந்தை ஆசியுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறி் ஆஷாவை அழைத்து சென்றனர். ஆனால் ஆஷாவுடன் குடும்பத்தினர் ஆஷாவை குஜராத் மாநிலத்தை சேர்ந்த வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
 
வெகு நாட்களாக மனைவி திரும்பி வராததால், மனைவியை தேடி பல இடங்களுக்கு சோகன்லால் அலைந்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மும்பைக்கு வந்த சோகன்லால் மும்பையில் உள்ள அம்பர்நாத் காவல் நிலையத்தில் இது பற்றி புகார் செய்தார்.
 
ஆனால் காவலர்கள் ஆஷாவை கண்டிபிடித்து கொடுப்பதாக தெரியவில்லை. இதனால் ஆஷாவைக் கண்டுபிடித்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
 
இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆஷாவை கண்டிபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறையினர் கர்ப்பமாக இருந்த ஆஷாவை கண்டுபிடித்து மும்பை நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை ஆஜர்படுத்தினர்.
 
அப்போது சோகன்லாலும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். 4 மாதங்களுக்கு பின் ஆஷாவை பார்த்த சோகன்லால் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஜ்ஜிமோர், ஷாலினி பன்சால்கர் ஆகியோர் ஆஷாவிடம் நீ யாருடன் செல்ல விரும்புகிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு ஆஷா சோகன்லாலுடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இதையடுத்து ஆஷாவை சோகன்லாலுடன் அனுப்பி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்