பேஸ்புக்கில் ஜோடி தேடிய தம்பதிகள் : இப்படி ஒரு முடிவா?

புதன், 3 பிப்ரவரி 2016 (17:04 IST)
விவாகரத்து பெற்ற ஒரு தம்பதியினர் தங்களுக்கான ஜோடியை சமூக வலைத்தளங்களில் தேடப்போய், முடிவில் அதிர்ச்சியை சந்தித்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.


 

 
உத்திரப்பிரதேச மாநிலம் பெரேல்லியை சேர்ந்த ஒரு தம்பதியினர், கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். இறுதியில் தங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
 
அதன் பின் அவர்களை தனிமை வாட்ட, இருவரும் பேஸ்புக்கில் வெவ்வேறு பெயரில், தங்கள் வயது மற்றும் தகவல்களை மாற்றி ஒரு பொய்யான ஐடி யில் உலா வந்தனர். கடைசியில், அந்த கணவருக்கு ஒரு பெண்ணும், அவரின் மனைவிக்கு ஒரு ஆணும் நண்பனாக கிடைத்துள்ளனர்.
 
அந்த கணவன், தனக்கு பிடித்த மாதிரி ஒரு ஜோடி அமையவே, பரஸ்பரம் பேஸ்புக்கில் நட்பை வளர்த்து வந்துள்ளார். இரவு பகலாக நீடித்த நட்பு, நாளைடைவில் காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்திக்க முடிவெடுத்தனர். அதற்காக பெரேல்லியில் உள்ள ஒரு ஹோட்டலை தேர்வு செய்தனர். 
 
அவர்கள் சந்திக்க முடிவு செய்த நாளன்று அந்த ஹோட்டலில் ஒரே களோபரம். ஒரு ஆணும் பெண்ணும் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். போலிசார் விரைந்து வந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
 
அந்த ஆணும் பெண்ணும் கூறியதை கேட்டு போலிசாருக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஏனெனில் தங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று பிரிந்து போன அந்த தம்பதிகள்தான், பொய்யான பெயரில் இப்படி நட்பாகி, காதலாகி, அந்த ஹோட்டலுக்கு சந்திக்க வந்துள்ளனர். ஹோட்டலில்தான் அது இருவருக்கும் தெரிய வந்துள்ளது. அதனாலேயே அங்கு களோபரம் நடந்துள்ளது.
 
ஹோட்டலில் தொடங்கிய சண்டை, காவல் நிலையம் வரை நீண்டுள்ளது. இதைக் கேட்டு போலிசார்கள் எப்படி சிரித்திருப்பார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்