அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தை நீக்கப்படாது: வெங்கையா நாயுடு உறுதி

வெள்ளி, 30 ஜனவரி 2015 (07:34 IST)
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற வார்த்தைகள் நீக்கப்படாது என்று கூறியுள்ளார்.
 
மத்திய அரசு சார்பாக, குடியரசு தினத்தையொட்டி வெளியான விளம்பரத்தில் அரசியலமைப்பின் முன்னுரையில் மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட வார்த்தைகள் இடம் பெறவில்லை.
 
இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், இது கவனக்குறைவாக நடந்திருந்தாலும் இது வரவேற்கக் கூடியது என்றும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
 
மேலும், இந்திய அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று  சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வியெழுப்பினர்.
 
இது குறித்து வெங்கையா நாயுடு கூறியதாவது:-
 
அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தை நீக்கப்படாது. மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தை பாஜக அரசு முழுமையாக கடைப்பிடிக்கிறது.
 
மதச்சார்பின்மை என்பது இந்திய மக்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. இது நமது கலாசாரத்தில் ஒன்று. அரசின் அதிகாரப்பூர்வ விளம்பரம் மட்டுமே அரசியல் அமைப்புச் சட்டத்தை வெளிப்படுத்தும். எனவே, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்