நீதிபதி கர்ணனின் மன்னிப்பு ஏற்கப்படவில்லையா? கைது செய்ய போலீசார் தீவிரம்

வெள்ளி, 12 மே 2017 (22:55 IST)
கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாகவும், அவர் மீதான தண்டனையை ரத்து  செய்ய வேண்டும் என்றும் இன்று மீண்டும் ஒரு மனுவை கர்ணனின் வழக்கறிஞர் தாக்கல் செய்ய வந்தார். ஆனால் இந்த மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் பதிவாளர் மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.



 


இந்த நிலையில் ஏற்கனவே நீதிபதி கர்ணன் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின்போது, 'நீதிபதிகள் அமர்வு, கர்ணன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைப் பற்றி நன்கு, ஆலோசித்து, தீர்மானம் செய்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இந்த நடவடிக்கை அவசியமான ஒன்றே எனவும், கர்ணனின் நடவடிக்கையே இதற்குக் காரணம் எனவும் நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டுள்ளது.

எனவே இதன் மூலம் கர்ணனின் மன்னிப்பை சுப்ரீம் கோர்ட் ஏற்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் கர்ணனை கண்டுபிடிக்கும் கொல்கத்தா போலீசின் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்