’எனது ஆபாச படங்களை உம்மன் சாண்டி கட்சியினர்தான் வாட்ஸ் ஆப்பில் பரப்பினர்’ - சரிதா நாயர்

திங்கள், 8 பிப்ரவரி 2016 (11:49 IST)
என்னுடைய நிர்வாண காட்சிகளை உம்மன் சாண்டியின் காங்கிரஸ் கட்சியினர்தான் வாட்ஸ் ஆப்பில் பரப்பினர் என்று சரிதாநாயர் விசாரணை கமிஷனில்  கூறியுள்ளார்.
 

 
திரைப்பட நடிகை சரிதா நாயர், கோவையில் ஐசிஎம்எஸ் எனும் பெயரில் சூரிய மின்சக்தி உபகரணங்களை விற்பனை செய்து வந்தார். இவரிடம் கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜன் ரூ. 28 லட்சம், உதகையை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன், ஜோயோ ஆகியோர் ரூ. 5.50 லட்சம் ரொக்கப் பணத்தினை சோலார் பேனல் அமைப்பதற்காக கொடுத்தனர்.
 
ஆனால், சரிதா நாயர் சோலார் பேனல் அமைக்கவோ, பணத்தை திருப்பித் தரவோ இல்லை. இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சரிதா நாயர், கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர். இந்த மோசடி வழக்கு, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், சோலார் பேனல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன், நேற்று முன்தினம் 8வது நாளாக வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ”எனது சோலார் நிறுவனத்திற்கு கேரளாவில் பல முக்கிய அரசியல்  பிரமுகர்கள் உதவி உள்ளனர். அதேபோல் எனது நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் சில அரசியல் பிரமுகர்கள் காரணமாக இருந்துள்ளனர்.
 
எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினரான ஹைபி ஈடனுடன், நான் எனது சோலார் தொழில் சம்பந்தமாக எதுவும் பேசியது இல்லை. அவருடன் மற்ற விஷயங்கள் குறித்துதான் பேசியிருக்கிறேன். அது என்ன விவரம் என்று வெளிப்படையாக கூறமுடியாது.
 
கேரளாவில் உள்ள காவல் நிலையங்களில் சோலார் பேனல் அமைக்க காவல் சங்கத்தினர் என்னிடம் ரூ.40 லட்சம் கேட்டனர். ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் ரூ.20 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது.
 
கடந்த வருடம் வாட்ஸ் ஆப்பில் என்னுடைய நிர்வாண காட்சிகள் பரவின. இந்த காட்சிகளை பரப்பியது ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் தான் என்று எனக்கு நன்றாக தெரியும். வாட்ஸ் ஆப்பில் என் நிர்வாண காட்சிகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்தேன்.
 
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு விசாரணையை முடக்கி விட்டனர்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்