காங்கிரஸார் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காகவே ஜெயந்தி நடராஜன் மீது ஊழல் புகார்களைக் கூறுகின்றனர் - வெங்கையா நாயுடு

ஞாயிறு, 1 பிப்ரவரி 2015 (10:47 IST)
தனது தவறுகளை மறைப்பதற்காக ஜெயந்தி நடராஜன் மீது காங்கிரஸ் ஊழல் புகார் கூறுகிறது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
 
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு வெங்கையா நாயுடு பதில் கூறுகையில், “அரசியல் சாசன அதிகாரத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அரசாங்கத்தில் செயல்படுவதற்கு எப்படி அனுமதிக்கப்பட்டார்கள் என்பதற்கு காங்கிரஸ் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். 
 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது காங்கிரஸ் தலைமை அரசியல் சாசன அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டது என்ற எங்களது மோசமான பயத்தை, மக்கள் கருதியதை ஜெயந்தி நடராஜன் உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த பொறுப்புகளும் இல்லாமல் அதிகாரத்தை அனுபவித்து இருக்கிறார்கள்.
 
ஜெயந்தி நடராஜனின் அறிவிப்புக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னதாக ஒரு சம்பவமும் நடந்து இருக்கிறது. ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியில், குப்பை தொட்டியில் வீசுவதற்கு தான் தகுதியானது என்று ஒரு அவசர சட்டம் பற்றி கூறினார். இந்த சம்பவம் நடந்து 4 நாட்களில் அந்த அவசர சட்டம் குப்பை தொட்டியில் போடப்பட்டது.
 
தனது தவறுகளை மறைப்பதற்காகவே ஜெயந்தி நடராஜன் மீது காங்கிரசார் ஊழல் புகார் கூறுகின்றனர். ஏற்கனவே நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூறியதுபோல முந்தைய அரசில் அனுமதி வழங்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் துறையின் அனைத்து முடிவுகள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்“ என்று வெங்கையா நாயுடு கூறினார்.
 
மேலும், ஊழல் காரணமாகவே ஜெயந்தி நடராஜன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்களே? என்னும் கேள்விக்கு வெங்கையா நாயுடு பதில் கூறுகையில், “அதுபற்றி எனக்கு தெரியாது. அது உண்மையாக இருந்தால், ஏன் காங்கிரஸ் கட்சி அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெறுமனே அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யுங்கள் என்று கூறிவிட்டால் போதுமா?
 
இந்த அறிவிப்பு மன்மோகன்சிங் அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கியது என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்த அனைத்து முடிவுகளும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
 
அப்போது நான், ‘பிரதமர் தலைமை தாங்குவார், சோனியா காந்தி முடிவு எடுப்பார்’ என்று வழக்கமாக சொல்வேன். நான் சொன்னது சரியாகிவிட்டது.“ என்று வெங்கையா நாயுடு  பதிலளித்தார்.
 
மத்திய முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேற்று முன்தினம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அப்போது, தான் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது ராகுல் காந்தி துறை நடவடிக்கைகளில் தலையிட்டதாக புகார் கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் பலர் இதற்கு மறுப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்