ரூ.36 ஆயிரம் கோடி ஊழல்: சத்தீஷ்கார் முதல்வரை பதவி விலக சொல்கிறது காங்கிரஸ்!

ஞாயிறு, 5 ஜூலை 2015 (11:33 IST)
அரிசி பொது வினியோகத்தில் ரூ.36 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதனையடுத்து சத்தீஷ்கார் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 

 
பாஜக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் போலீசாரால் தேடப்படும் முன்னாள் ஐபிஎல் கிரிக்கெட் தலைவர் லலித்மோடிக்கு உதவியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக மகாராஷ்டிர மாநில பெண் அமைச்சர் பங்கஜா முண்டே, குழந்தைகள் நல மேம்பாட்டு திட்டத்தில் ரூ.206 கோடி ஊழல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த குற்றச்சாட்டுகளில் சிக்கிய அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் போராட்டங்கள் நடத்தி வருகிறது.
 
இந்நிலையில், அடுத்த அதிரடியாக, சத்தீஷ்கார் மாநில முதல்வர் ராமன்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.36 ஆயிரம் கோடி அரிசி பொது வினியோகத்தில் ஊழல் புரிந்துள்ளதாக ஆதாரங்களுடன் நேற்று காங்கிரஸ் கட்சி அம்பலப்படுத்தி அதிரடி குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டுகள் பாஜகவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய்மக்கான் கூறும்போது, ''சத்தீஷ்கார் மாநிலத்தில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசியில் முதல்வர் ராமன்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு மெகா ஊழலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழலில், முதல்வர் ராமன்சிங் மற்றும் அவரது மனைவி மற்றும் மைத்துனி, சமையல்காரர் உள்ளிட்ட 4 பேர் சிக்கியுள்ளனர்.
 
இதுதொடர்பாக கிடைக்க பெற்ற முக்கிய ஆவணமாக கருதப்படும் டைரி, பென்டிரைவ் மற்றும் தஸ்தாவேஜுகளிலும் அவர்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஆனால், அவர்கள் மீது முதல்வர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் தொடர்பாக கிடைத்த டைரியில், முதலமைச்சர் ராமன்சிங் அவரது மனைவியும் நேரடியாக பணப்பலன் பெற்றுள்ளதாக ஊழல் தடுப்பு அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், இதுபற்றி விசாரிக்க ராமன்சிங் முன்வரவில்லை. ஊழலில் கிடைத்த பணம் டெல்லி, நாக்பூர் மற்றும் லக்னோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
ஊழல் டைரியில் முக்கிய குற்றவாளிகள் பற்றி 113 பக்கங்கள் இருந்தன. ஆனால் அதில் தற்போது 6 பக்கங்கள் மட்டுமே உள்ளன. மேலும், இந்த ஊழல் வழக்கு பற்றிய விசாரணையை உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும். ஊழல் வழக்கில் சிக்கிய முதல்வர் ராமன்சிங் உடனடியாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்