ரூ.500 செலவில் திருமணம் செய்து கொண்ட கலெக்டர்

புதன், 30 நவம்பர் 2016 (15:59 IST)
ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாடே சிக்கித் தவிக்கும் சூழலில், இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது திருமணத்தை வெறும் ரூ.500 செலவில் செய்து முடித்த சம்பவம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.


 

 
ராஜஸ்தானை சேர்ந்தவர் ஆசிஷ் வசிஷ்டா. அதேபோல் பஞ்சாபி சமூகத்தை சேர்ந்தவர் சலோனி. அவர்கள் இருவரும், 2013ம் ஆண்டு முசோரியில் உள்ள லால் பகதூர் தேசிய ஐ.ஏ.எஸ் பயிற்சி கல்லூரியில் ஒன்றாக படித்த போது,  இருவருக்குமிடையில் காதல் மலந்தது.
 
தற்போது, பயிற்சி முடித்து ஆசிஷ் வஷிஷ்டா மத்திய பிரேதச மாநிலம் கோகத் எனும் மாவட்டத்தில் துணை கலெக்டராகவும், அதேபோல், தெலுங்கானா மாநிலம் விஜயவாடாவில் சலோனி துணை கலெக்டராக பணி புரிந்து வருகிறார்.
 
ரூபாய் நோட்டு பிரச்சனை காரணமாக, மக்களிடம் சரியான பணப்புழக்கம் இல்லை. எனவே, ஏராளமான திருமணங்கள் எளிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. 
 
அதைக் கருத்தில் கொண்டு, தங்களின் திருமணத்தையும் எளிய முறையில் நடத்த அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று, அவர்கள் இரு வீட்டாரின் முன்னிலையில், மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அலுவலகத்தில் மாலை மாற்றி பதிவு திருமணம் செய்து கொண்டனர். 
 
அவர்கள் இருவருக்கும் மாஜிஸ்திரேட் மற்றும் அலுவலக ஊழியர்கள் திருமண வாழ்த்து தெரிவித்தனர். இந்த திருமணத்திற்கு அவர்கள் செய்த மொத்த செலவு வெறும் 500 ரூபாய் மட்டும்தானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்