ஆலம் விடுதலை விவகாரம்: நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதை ஏற்க முடியாது - மோடி உறுதி!

திங்கள், 9 மார்ச் 2015 (15:51 IST)
ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் மஸ்ரத் ஆலம் விடுதலை தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது என்று தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறும்போது, "மஸ்ரத் ஆலம் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக காஷ்மீர் அரசு மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது. அவையில் உறுப்பினர்கள் எழுப்பும் கோபம் நாடு முழுவதும் எழுந்துள்ள அதிருப்தியின் அடையாளம்" என்றார்.
 
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "பிரதமர் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. மஸ்ரத் ஆலம் விடுதலை குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு நிச்சயமாக பிரதமருடன் ஆலோசித்திருக்கும்" என்றார்.
 
முன்னதாக பேசிய ராஜ்நாத் சிங், "பொதுமக்கள் பாதுகாப்பில் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. மஸ்ரத் ஆலம் மீது கொலை, கொலைச் சதி உள்ளிட்ட 27 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், அவர் விடுதலை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் உள்துறை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. ஜம்மு-காஷ்மீர் மாநில உள்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், ஜம்மு-காஷ்மீர் அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கப்படும்" என்றார். மஸ்ரத் ஆலம் விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது.
 
மக்களவை கூடியவுடன், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளியை அடுத்து, மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார். இருப்பினும், மக்களவையில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். அவையில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
 
இதேபோல், மாநிலங்களவையிலும் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் பேசிய அருண் ஜேட்லி, "தேசத்தின் பாதுகாப்பில் அரசு எவ்வித சமரசமும் செய்யாது. உள்துறை அமைச்சர் காஷ்மீர் அரசிடம் விளக்கம் கோரியுள்ளார். அதன்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
 
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மஸ்ரத் ஆலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டித்த பாஜக, இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சி (மஜக) கூட்டணிக் கட்சியான தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம்சாட்டியது. இதனால், காஷ்மீர் கூட்டணி ஆட்சியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
 
2010ஆம் ஆண்டில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர் ஆலம். அந்தக் கலவரத்தில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆலம் கைது செய்யப்பட்டார். இவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்