பத்ம விருதுகள் அறிவித்ததாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு

வெள்ளி, 23 ஜனவரி 2015 (13:50 IST)
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்ட 148 பேருக்கு பத்ம விருதுகளை அறிவித்ததாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 
 
பல்வேறு துறைகளில் நாட்டிற்கு சிறந்த பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, 2015 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பத்ம விருதுக்கு முன்னாள் துணை பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி, பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரும் தேர்வாகியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
 
மேலும், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், பாலிவுட் நடிகர் திலீப் குமார், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகர் சல்மான் கானின் தந்தையும், திரைக்கதை ஆசிரியருமான சலீம் கான், ஹாக்கி அணி கேப்டன் சர்தரா சிங், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, செஸ் வீரர் சசிகிரண் கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் சுஷீல் குமார், அவரது பயிற்ச்சியாளர் சத்பால், பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய், செய்தியாளர்கள் ரஜத் சர்மா, ஸ்வபன் தாஸ்குப்தா, ஹரி சங்கர் வியாஸ், மறைந்த நடிகர் பிரான் உள்ளிட்ட 148 பேருக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
இதனை மத்திய அரசு உறுதியாக மறுத்துள்ளது. பத்ம விருதுகள் குறித்து அரசு இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்