கருக்கலைப்பு செய்வதற்கான கால வரம்பை 24 வாரமாக உயர்த்த மத்திய அரசு திட்டம்

வெள்ளி, 31 அக்டோபர் 2014 (17:00 IST)
கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான கால வரம்பை 20 வாரத்திலிருந்து  24 வாரமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 
கரு உண்டான தினத்திலிருந்து 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள சட்டம் தற்போது அனுமதி அளிக்கிறது. அதற்கு பிறகு கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். 20 வாரங்கள் முடிந்த நிலையில் கருவில் இருக்கும் குழந்தை குறையுடன் இருப்பது தெரியவந்தாலும் அதனை கருக்கலைப்பு செய்ய முடியாது.
 
இந்நிலையில் இதனை எதிர்த்து மும்பையை சேர்ந்த நிகேதா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது 20 வாரத்துக்கு பின்னர் தெரியவந்தது. உயர்நீதிமன்றம் அனுமதி அளிக்காததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கருக்கலைப்பு செய்ய அனுமதி பெற்றார்.
 
அப்போது இந்த பிரச்சனை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது பிரசவம் மற்றும் கருகலைப்பு சட்டத்தில் திருத்த வரைவு மசோதா ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதனை சுகாதாரத்துறை இணையதளத்தில் இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.
 
அதில் பெண்களின் உடல்நலம், மனநலம், குறிப்பிட்ட சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் கருக்கலைப்பு செய்து கொள்ளும் காலத்தை 24 வாரங்கள் வரை அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறக்கப் போகும் குழந்தை உடல் நலம் குன்றியோ, மனவளர்ச்சி குன்றியோ ஏதேனும் குறைபாட்டுடன் பிறக்கும் என்பது மருத்துவ ரீதியாக தெரியவரும் பட்சத்தில் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பை குறிப்பிட்ட சூழலில் மேலும் நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்