கிரிக்கெட் ஊழல் ஆவணங்களை சி.பி.ஐ. எடுத்துச்சென்றுவிட்டது - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வியாழன், 17 டிசம்பர் 2015 (09:47 IST)
தனது அலுவலகத்தில் சோதனை யிட்ட சிபிஐ அதிகாரிகள், கிரிக்கெட் ஊழல் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், “தனது அலுவலகத்தில் இருந்தமுக்கியமான கோப்புக்களை காணவில்லை; அதில் தில்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பான கோப்புக்களும் அடங்கும். சி.பி.ஐ.தான் இந்த பைல்களை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 
தில்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகியாக அருண்ஜெட்லி இருந்தார் என்ற நிலையில், அவர்மீது வைக்கப்பட்டிருந்த புகார்கள், சிபிஐ எடுத்துச் சென்ற கோப்புக்களில் இருந்ததாகவும், இது தொடர்பான விசாரணை அறிக்கை அண்மையில் தன்னிடம் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதைக் கைப்பற்றும் முயற்சியுடன்தான் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது என்றும் கெஜ்ரிவால் மேலும் கூறியுள்ளார்.
 
தில்லி அரசின் முதன்மைச் செயலாளர் ராஜேந்திர குமார் மீதான புகாருக்கு, கொஞ்சமும் தொடர்பில்லாத இந்த கோப்புக்களை எடுத்துச் சென்றது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்