தயாநிதி மாறனிடம் சிபிஐயின் முதல் நாள் விசாரணை முடிந்தது

திங்கள், 30 நவம்பர் 2015 (19:17 IST)
பிஎஸ்என்எல் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய முதல் நாள் விசாரணை முடிந்தது. இவரிடம் டிசம்பர் 5 ஆம் தேதி வரை சிபிஐ அதிகாரிகள் தினமும் விசாரணை நடத்த உள்ளனர்.


 
 
பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை, தனியார் தொலைக்காட்சிக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் தொலைக்காட்சி ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குபதிவு செய்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கில் தயாநிதி மாறனை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
 
மேலும், தயாநிதி மாறனுக்கு முன்ஜாமீனை நீட்டித்து உத்தரவிட்டதோடு, அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை என்றும் அதேசமயம் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை விசாரணைக்காக சிபிஐ யிடம் தயாநிதி மாறன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிபிஐயின் கேள்விகளுக்கு தயாநிதி மாறன் எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
 
அதன்படி, இவ்வழக்கில், தயாநிதிமாறன் டெல்லி  சிபிஐ அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜரானார். இவரிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வந்த முதல் நாள் விசாரணை முடிந்துள்ளது. தயாநிதி மாறனிடம் டிசம்பர் 5ஆந் தேதி வரை நாள்தோறும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்