இந்தியா வந்தார் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்

திங்கள், 5 அக்டோபர் 2015 (07:00 IST)
இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்தியா வந்துள்ளார்.

 
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு வந்த அவருக்கு, இந்திய அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் இன்று காலை 9 மணிக்கு மெர்கலுக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அதன் பிறகு  ராஜ்ஹட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதிக்கு அவர் அஞ்சலி செலுத்த உள்ளார்.
 
இந்நிகழ்வுகளுக்கு பிறகு ஏஞ்சலா மெர்கல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது, பாதுகாப்பு, பொருளாதாரம் ஆகியவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
 
மெர்கலின் இந்த பயணத்தின் போது ஜெர்மனி தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளிலேயே ஜெர்மனியும் இந்தியாவும் அதிக அளவிலான வர்த்தக உறவுகளை கொண்டுள்ளது.  கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற வர்த்தகத்தின் மதிப்பு 15. 96 பில்லியன்  அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்