மத்திய பிரதேசத்தில், தீப்பிடித்து எரிந்த பேருந்து: 35 பேர் உடல் கருகி உயிரிழப்பு

செவ்வாய், 5 மே 2015 (07:45 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் பாலத்தில் இருந்து விழுந்த பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 35 பயணிகள் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலத்தில் சத்தர்பூர் என்ற இடத்தில் இருந்து சத்னா என்ற இடத்துக்கு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பன்னா மாவட்டத்தில் உள்ள பாண்டவ் நீர்வீழ்ச்சி என்ற இடம் அருகே ஒரு பாலத்தில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கீழே இருந்த ஓடையில் விழுந்தது.
 
சுமார் 16 அடி உயரத்தில் இருந்து அந்த பேருந்து தலைகுப்புற விழுந்ததில் பேருந்தின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றிக் கொண்டது.
 
அந்தத் தீ மளமளவென பரவி பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்தது. பேருந்தின் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் பேருந்துக்குள் இருந்த பயணிகளால் வெளியே வரமுடியவில்லை.
 
இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். அந்த வழியாக சென்றவர்களும், அக்கம்பக்கத்தினரும் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
 
மேலும் காவல்துறையினருக்கும், தீயணைப்பு நிலையத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் பேருந்தின் பெரும்பாலான பகுதி எரிந்து விட்டது.
 
காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் பேருந்துக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் இருந்த 18 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.
 
மேலும், பேருந்துக்குள் கருகிய நிலையில் இறந்து கிடந்த ஏராளமான உடல்களை அவர்கள் வெளியே எடுத்தனர். இதில் சுமார் 35 பேர் வரை கருகி இறந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் இதுபற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்த பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
 
‘டுவிட்டர்’ வலைதளத்தில் அவர் எழுதியுள்ள இரங்கல் செய்தியில், "விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்