வரி விதிப்பு இனங்களை அதிகரிப்பதன் மூலம் வரி வருவாயைப் பெருக்க முடியும் - அருண் ஜேட்லி

ஞாயிறு, 23 நவம்பர் 2014 (11:14 IST)
மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள நிலையில், வரி விதிப்பு இனங்களை அதிகரிப்பதன் மூலம் வரி வருவாயைப் பெருக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
 
இது குறித்த அருண் ஜேட்லி கூறியதாவது:-
 
மத்திய அரசின் பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறேன். கடந்த பட்ஜெட்டில் வரி விலக்குக்கான வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2¼ லட்சமாக உயர்த்தினேன்.
 
போதிய நிதி ஆதாரங்கள் இருந்திருந்தால் இந்த வரம்பை மேலும் உயர்த்தி இருப்பேன். தற்போது மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் பெறுவோர் சிறிதளவு பணத்தை சேமித்தால், வருமான வரி செலுத்த வேண்டியது இருக்காது.
 
விலைவாசி, போக்குவரத்து செலவு, குழந்தைகளுக்கான படிப்பு செலவு ஆகியவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இந்த வருவாய் உள்ளவர்கள் சேமிப்பது என்பது இயலாத காரியம்தான்.
 
நடுத்தர மக்கள், மாத சம்பளம் பெறுவோர் மீது கூடுதல் வரிச்சுமையை சுமத்த விரும்பவில்லை. அதேசமயம் வரிஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 
வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தினால் வரி செலுத்துவோரிடம் அதிக பணம் இருக்கும். இதனால் அவர்கள் அதிகம் செலவிடுவார்கள். அப்போது அரசுக்கு மறைமுக வரி வசூல் அதிகமாகும்.
 
அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் கிட்டத்தட்ட பாதி அளவு உற்பத்தி வரி, கலால் வரி, சேவை வரி போன்ற மறைமுக வரிகள் மூலம்தான் கிடைக்கிறது. எல்லோருமே மறைமுக வரி செலுத்துகிறார்கள். எனவே வரி விதிப்பு இனங்களை அதிகரிப்பதன் மூலம் வரி வருவாயை பெருக்க முடியும் என்று அருண் ஜேட்லி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்