ஒரு பெண்ணை கொடூரமாக தாக்குவது சாதாரண தவறா? முலாயம் கருத்திற்கு நிர்பயா பெற்றோர் கண்டனம்

வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (11:44 IST)
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனவும், ஆண்கள் தவறுகள் செய்வார்கள், அதற்காக அவர்களை தூக்கிலிட முடியுமா என்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 
மொரடாபாதில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், அண்மையில் மும்பை சக்தி மில்ஸ் வளாகத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை குறிப்பிட்டு,  பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்தில்  மாற்றம் கொண்டுவர  வேண்டுமெனவும், ஆண்கள் தவறுகள் செய்வார்கள், அதற்காக அவர்களை தூக்கிலிட முடியுமா எனவும் பேசியுள்ளார்.
 
தொடர்ந்து பேசிய அவர், ஆணும், பெண்ணும் நட்பாய் பழகுவதாகவும், அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்ட பின், அந்த பெண் தான் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தபட்டதாக புகார் கூறுவதாகவும் பேசியுள்ளார். இதற்கு பலரும் அவர்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை  செய்த இளைஞர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்று கூறிய முலாயம் சிங்கின் கருத்திற்கு  டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பரிதாபமாக பலியான பெண்ணின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்த குறித்து பேசிய நிர்பயாவின் தந்தை, முலாயம் சிங் போன்ற மூத்த தலைவர்கள் இத்தகைய கருத்துக்களை தெரிவிப்பது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.  
 
நிர்பயாவின் தாய், ஒரு பெண்ணை இலக்காக கொண்டு, அவளை கொடூரமாக தாக்குவது சாதாரண தவறு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்