கறுப்புப் பணப் பட்டியல் : 289 பேரின் கணக்கில் பணமே இல்லை

வெள்ளி, 7 நவம்பர் 2014 (10:19 IST)
உச்ச நீதிமன்றத்தில்  கறுப்புப் பண விவகாரத்தில் தாக்கல் செய்த பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை என்று தெரிய வந்துள்ளது.
 
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
 
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் அடங்கிய பட்டியல், பிரான்ஸ் நாடு மூலமாக இந்தியாவுக்கு ஏற்கனவே கிடைத்தது. அந்த பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ளது.
 
இந்நிலையில், அந்தப் பட்டியலை ஆய்வு செய்தபோது, பட்டியலில், 289 பேரின் வங்கி கணக்கில் பணமே இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. அதிலும், அவர்களில் 122 பேரின் பெயர்கள், அதே பட்டியலில் இரண்டு இடத்தில் வருகின்றன.
 
மேலும், இந்த கணக்குகளை இயக்கியது தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை. அந்த கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, எப்போதெல்லாம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது என்பன போன்ற விவரங்கள் எதுவும் இல்லை.
 
இதனால், சம்பந்தப்பட்ட கணக்குக்கு உரியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது.
 
இந்தப் பட்டியலை கொண்டு, 150 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஏற்கனவே சோதனை நடத்தி உள்ளனர். அதன் அடிப்படையில், 300 பேர் மீது வழக்கு தொடர்வது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
 
சிறப்பு புலனாய்வு குழு, மத்திய அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் பின்பற்றி வரும் ஒரு புதுமையான வழிமுறையை குறிப்பிட்டுள்ளது.
 
அதாவது, பட்டியலில உள்ள கறுப்பு பண முதலைகளே, சுவிஸ் வங்கியிடம் இருந்து தங்கள் கணக்கு விவரங்களை பெற்றுத்தர வேண்டும். அப்படித் தந்தால், அவர்கள் மீது கடுமையான தண்டனை அளிக்கும் சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட மாட்டாது.
 
இந்த வாய்ப்பு, நூற்றுக்கும் மேற்பட்ட கணக்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணக்கு விவரங்களை பெற்றுத்தந்தால், அவர்கள் மீது மென்மையான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்படும்.
 
கறுப்புப் பணம் வைத்திருப்போர் மீது ‘சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தை‘ பயன்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அமலாக்கப்பிரிவின் உதவியை சிறப்பு புலனாய்வு குழு நாடி உள்ளது.
 
மத்திய அரசு அதை ஏற்று, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சிலரை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. மேலும், கறுப்புப் பணம் பற்றி பொதுமக்களிடம் இருந்து தகவல் திரட்டும் யோசனையையும் சிறப்பு புலனாய்வு குழு விரைவில் செயல்படுத்த உள்ளது என்பது குநிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்