அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது இந்து அமைப்புகள் பலவற்றின் பல ஆண்டு கனவாக இருந்து வந்தது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான பின் ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டும் பணிகள் தொடங்கி தற்போது நிறைவேறியும் உள்ளது. ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ராமர் கோவில் திறப்பு குறித்து பேசத் தொடங்கியது முதலே பிரச்சினைகளும், சர்ச்சைகளும் எழத் தொடங்கிவிட்டது. முதலில் ராமர் கோவில் தலைமை குருக்கள், உப அர்ச்சகர்கள் நியமனம் குறித்து சர்ச்சை எழுந்தது. அதுபோல கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்கு அயோத்தியை சேர்ந்த புரோகிதர்கள் வரவழைக்கப்படாமல் வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் தற்போது உத்தரகாண்ட் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த், அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா சனாதன தர்மத்தை மீறி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை என்றும், அதேசமயம் இந்து மதத்தின் நெறிமுறைகளை கடுமையாக தாங்கள் பின்பற்றுவது தங்கள் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை பின்பற்றாமல் நடைபெறும் இந்த ராமர் கோவில் விழாவில் சங்கராச்சாரியார்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அவர் அறிவித்துள்ளார். மேலும் சில இந்து சமய மடங்களும் ராமர் கோவில் திறப்பில் சடங்குகள், தர்மங்கள் பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டி வருகின்றன.