ஜம்மு-காஷ்மீரில், பாஜக-மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சிக்கு உடன்பாடு

புதன், 25 பிப்ரவரி 2015 (11:06 IST)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜக-மக்கள் ஜனநாயக கட்சியிடையே நடந்து வந்த பேசு வார்த்தையில கூட்டணி ஆட்சி நடத்த உடன்பாடு எட்டபபட்டுள்ளது.
 
87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
 
இதைத் தொடர்ந்து டிசம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முப்தி முகமது சயீத்தின் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களைக் கைப்பற்றியது.
 
பாஜக 25 இடங்களுடன் 2 ஆம் இடம் பிடித்தது. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 இடங்களும் கிடைத்தன.
 
இதனால், எந்தவொரு கட்சிக்கும், தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வந்தது. காஷ்மீரில், கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்கள் ஜனநாயக கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின.
 
இந்நிலையில், பாஜக தலைவர் அமித் ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி சந்தித்துப் பேசினார்.
 
45 நிமிடம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், காஷ்மீரில் இரு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டது. இதை இரு தலைவர்களும் செய்தியாளர்கள்  கூட்டத்தில் கூட்டாக அறிவித்தனர்.
 
இது குறித்து அமித் ஷா கூறுகையில், "பல்வேறு விஷயங்களில் பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் குறைந்தபட்ச செயல்திட்டம் வகுப்பதில் கருத்தொற்றுமை எட்டப்படுகிறது. முக்கிய விஷயங்களில் இருந்து வந்த முட்டுக்கட்டை தகர்க்கப்பட்டுள்ளது.
 
வெகு விரைவில் காஷ்மீர் மக்கள், மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசு அமையப்பெறுவார்கள். அரசு அமைப்பதில் இருந்த தடைகள் பெரும்பாலும் களையப்பட்டு விட்டன" என கூறினார்.
 
மெகபூபா கூறுகையில், "குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது கூட்டணியின் செயல்திட்டமாக இருக்கும். முதல் முறையாக இப்போதுதான், மாநில மக்களின் நலனும், தேசத்தின் நலனும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலமும் பயன்பெறும். நாடும் பலன் அடையும்" என்று கூறினார்.
 
இந்நிலையில், காஷ்மீரில் புதிய அரசு மார்ச் 1 ஆம் தேதி பதவி ஏற்கும் என்றும், 6 ஆண்டுகளுக்கும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதலமைச்சராகப் பதவி வகிப்பார் என்றும், பாஜக வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்