பாஜகவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்: லாலுபிரசாத் யாதவ்

திங்கள், 18 ஜனவரி 2016 (10:53 IST)
பாஜகவுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் என்று ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து லாலுபிரசாத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
56 அங்குல மார்பு என்னிடம் இருக்கிறது என்று முன்பு நீங்கள் (மோடி) பெருமிதத்துடன் கூறினீர்கள்.
 
எல்லைக்கு அப்பால் இருந்து நம்மிடம் யாராவது வாலாட்டினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று வீரமாகவும் பேசினீர்கள்.
 
இன்றோ பாகிஸ்தான் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் நுழைந்து பதன்கோட்டில் தாக்குதல் நடத்துகிறார்கள். விரமிக்க நமது ராணுவ வீரர்களைக் கொல்கிறார்கள்.
 
பாஜக வின் ஆட்சியில் நாடு பாதுகாப்பாக இல்லை. எனவே, பாஜக வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும்.
 
நானும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து அஸ்தினாபுரத்தில் (டெல்லி) இருந்து பாஜகவை வெளியேற்றுவோம்.
 
எனக்கும், நிதிஷ் குமாருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆனால், எங்கள் இருவருக்கும் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை.
 
சாதிவாரியாக நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.
 
இல்லாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக பாட்னாவிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் போராட்டம் நடத்துவோம்.
 
விரைவில் மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் நாடு தழுவிய போராட்டத்தையும் தொடங்குவேன்.
 
பீகார் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எனது மகன்கள் இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். இவ்வாறு லாலுபிரசாத் யாதவ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்