டவுசர் அணிந்து சட்டசபைக்கு வந்த பாஜக எம்எல்ஏ!

செவ்வாய், 29 நவம்பர் 2016 (11:08 IST)
பீகார் சட்டசபைக்கு பாஜக எம்எல்ஏ பினாய் பிஹாரி நேற்று டவுசர் மற்றும் கையில்லா பணியன் அணிந்து கொண்டு வந்துள்ளார். சரியான ஆடை அணியாமல் வந்ததால் அவருக்கு சட்டசபைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


 
 
கடந்த 2013-ஆம் ஆண்டு பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பீகார் மாநிலத்தில் பேட்டியாவில் இருந்து மனுவாப்புல் பகுதி வரை உள்ள 44 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.
 
இந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாததால் மேற்கு சம்பாரண் பகுதியின் பாஜக எம்எல்ஏ பினாய் பிஹாரி இதனை கண்டிக்கும் விதமாக நேற்று சட்டசபைக்கு டவுசர் மற்றும் கையில்லாத பணியனுடன் சென்றுள்ளார். இதனையடுத்து சட்டசபைக்கு அவமரியாதை ஏற்படுத்திய பினாய் பிஹாரிக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
 
இதனால் அவர் சட்டசபை வளாகத்திலேயே போராட்டம் நடத்தினார். இந்த திட்டம் நிறைவேற்றும் வரை சட்டசபைக்கு இப்படித்தான் வருவேன் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பினாய் பிஹாரியின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் அவைத்தலைவர் உறுதியளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்