துணிச்சலான முடிவு : மோடியின் அறிவிப்பை பாராட்டி தள்ளிய பில்கேட்ஸ்

வியாழன், 17 நவம்பர் 2016 (13:21 IST)
பழைய நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார்.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார்.
 
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.
 
இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரில், காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகள், மத்திய அரசின் முடிவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில், உலக பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் டெல்லி வந்துள்ளார். இன்று அவர் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது மோடியின் நடவடிக்கையை பாராட்டினார்.
 
“ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதன் மூலம் நிழல் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, வெளிப்படையான பொருளாதாரம் வலுப்பெறும். மேலும்,  நான் தொழில்நுட்பத்தை அதிகம் நம்புபவன். மக்கள் அதை  பயன்படுத்தும் போதுதான் தொழில்நுட்பம் அதிக அளவு வலுப்பெறும். 
 
உலக நாடுகள் எதுவும் செய்யாத ஒன்றை இந்தியா முயற்சித்துள்ளது  தற்போது, பெரிய பிரச்னைகளை தீர்க்கும் அளவுக்கு திறமை பெற்ற அரசை இந்தியா பெற்றுள்ளது” என்று அவர் பாராட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்