இதுபோன்ற தோல்வியை சந்தித்ததில்லை - நிதிஷ் குமார்

சனி, 17 மே 2014 (19:59 IST)
இதுபோன்ற தோல்வியை இதற்கு முன் சந்தித்ததில்லை என்று பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்து ஆட்சியமைத்து வந்தது. இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதால், கூட்டணியில் இருந்து விலகுவதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
 
பீகார் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், காங்கிரஸ் மற்றும் சில சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பீகாரில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் இரண்டு இடங்களை மட்டுமே பெற்றது. இதையத்து பீகாரில் தோல்விக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது.
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் நிதிஷ் குமார் கூறியதாவது:-
 
இதுபோன்ற தோல்வியை இதற்கு முன் சந்தித்தது இல்லை. தோல்விக்கான தார்மீக பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். பதவி விலகினாலும் சட்டசபையை கலைக்க ஆளுநரிடம் கோரிக்கை வைக்கவில்லை. இதுபோன்று முடிவுகள் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.
 
பீகார் மாநிலத்திற்கு நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் காரணமாக மக்களால் தேர்வு செய்யப்பட்டோம். பீகார் தேர்தல் முடிவுகள் வகுப்பு வாதத்திற்கு வழி வகுக்கின்றன. பாஜக கூட்டணியில் இருந்து விலகி சென்றது கொள்கை அடிப்படையில் எடுத்த முடிவு. பாஜக எங்களை வஞ்சித்தது. ஆனால் நாங்கள் அவர்களை வஞ்சிக்க போவதில்லை என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்