போலி சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனு தள்ளுபடி

புதன், 25 மார்ச் 2015 (19:16 IST)
கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள போலி சாமியார் ஆசாராம் பாபு தனக்கு தற்காலிக ஜாமின் வழங்கக்கோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 
போலி சாமியார் ஆசாராம் பாபு (73) தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
இதை தொடர்ந்து கடந்த 2001 மற்றும் 2006-க்கு இடைப்பட்ட காலங்களில் ஜோத்பூரில் உள்ள ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர் ஆசாராம் பாபுவை கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தான் மாநில சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். 
 
அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பல ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆசாராமின் வக்கீல் குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் கோர்ட்டில் மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்தார். 
 
ஆசாராம் பாபுவின் உடன்பிறந்த சகோதரியின் மகன் சங்கர் பாக்ரானி(68), கடந்த 19 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் தற்போது நகர மருத்துவமனை ஒன்றில் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஆசாராம் பாபுவுக்கு 30 நாட்கள் தற்காலிக ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் ஆசாராம் பாபு கேட்டுக்கொண்டிருந்தார். 
 
இந்த மனு மீதான விசாரணையின்போது, ஆசாராம் பாபுவுக்கு தற்காலிக ஜாமின் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஆசாராம் பாபுவை விடுவித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் இறந்தவரின் சகோதரர்கள் இருவர் உள்ளதால் இறுதிச்சடங்கை அவர்கள் நடத்தமுடியும் என்றும் அவர் கூறினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட மாவட்ட கூடுதல் நீதிபதி ஆர்.ஏ கோகாரி, ஆசாராம் பாபுவை ஜாமினில் விடுவிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்