பாபர் மசூதி இடிப்பில் ஈடுபட்டவர்களையும் தூக்கில் போடத் தயாரா? - அசாதுதீன் ஓவைசி கேள்வி

வெள்ளி, 24 ஜூலை 2015 (18:55 IST)
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் யாகூப் மேமனை போல தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? என்று எம்ஐஎம் கட்சியின் துணைத் தலைவர் ஆசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான யாகூப் அப்துல் ரஸாக் மேமன் வரும் 30 ஆம் தேதி தூக்கிலிடப்படுவார் என தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஹைதராபாத் எம்.பி.யும் எம்ஐஎம் கட்சியின் தலைவர் ஆசாதுதீன் ஒவைசிபொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, "1992ல் நடந்த மும்பை கலவரத்துக்கு காரணமானவர்களுக்கு தக்க தண்டனை அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 
அதேபோல தான், பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு குற்றத்துக்கு ஏற்ற அளவில் மரண தண்டனை அளிக்கப்படுமா?
 
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்த பாஜக -சிவசேனா மற்றும் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் போன்ற கூட்டணிகள் முடக்கி போட்டுவிட்டன. 1992ல் மும்பை கலவரத்திலும் 1993ல் நடந்த கலவரத்திலும் ஈடுபட்ட நபர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது வியக்கத்தக்கது. இந்த கலவரங்களில் 1000 பேர் கொல்லப்பட்டனர்.
 
மாயா கோடானி மற்றும் பாபு பஜ்ரங்கி ஆகியோர் 97 முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை பெற்றனர், இவர்களது ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக அதிகரிக்கும் மேல்முறையீட்டுக்கான சிறப்பு விசாரணைக்குழு விசாரணைக்கு நரேந்திர மோடி அனுமதிக்கவில்லை. இதனால் கோடானி மற்றும் பஜ்ரங்கி மீதான திட்டங்களை சிறப்பு விசாரணைக் குழு கைவிட்டது” என்று ஓவைஸி குற்றம் சாட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்