' தப்பி ஓடியவர்' என அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து வாரணாசி முழுவதும் போஸ்டர்கள்

செவ்வாய், 15 ஏப்ரல் 2014 (12:22 IST)
நாடு முழுவதும் ஒன்பது கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் துவங்கியுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரதிற்காக வாரணாசி சென்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர்  அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கும் வகையில், அவர் டெல்லி முதலமைச்சர் பதிவியில் இருந்து விலகியதை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. 
பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். 
 
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரதிற்காக வாரணாசிக்கு தனது குடும்பத்தினரோடு வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்ற 49 நாட்களில் டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதை  கேலி செய்யும் விதத்தில்,  நகரின் அனைத்து பகுதிகளிலும்  கெஜ்ரிவாலை 'தப்பி ஓடியவர்' என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.  
 
இன்று காலை வாரணாசி வந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கட்சி தொண்டர்கள் வரவேற்ற நிலையில் ரயில் நிலையத்திற்கு வெளியேயும்  'தப்பி ஓடியவர்' என்ற வாசகத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. 
 
அதனை ஆம் ஆத்மி தொண்டர்கள் அகற்றினர். எனினும்,  அங்கு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்