'தீவிரவாதிகளின் அடித்தளம் அஷம்கர்' - அமித் ஷாவின் கொடூர பேச்சால் மீண்டும் சர்ச்சை!

செவ்வாய், 6 மே 2014 (21:32 IST)
'தீவிரவாதிகளின் அடித்தளம் அஷம்கர்' என உத்தர பிரதேச மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. அவரது பிரச்சாரத்துக்கு ஒட்டுமொத்தமாக தடை  விதிப்பதுடன், அமித் ஷாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆவேசமாகக் கூறியுள்ளனர்.
Amit Shah Worst Speech
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், உ.பி. மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அமித் ஷா கடந்த மாதம் முசாபர்நகர் தேர்தல் பிரச்சாரத்தில், "முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர்களை பழிவாங்க வேண்டிய தேர்தல் இது" என பேசினார்.
 
இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதால், அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், உ.பி. மாநிலம் அஷம்கர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா, "அஷம்கர் தொகுதி தீவிரவாதிகளின் அடிப்படை தளமாக உள்ளது. அரசு மீது அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. மாநில அரசு அவர்களுக்கு பல வழக்குகளில் விடுதலை பெற்று கொடுத்திருக்கிறது. குஜராத் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் அஷம்கர் பகுதியை சேர்ந்தவர்கள்.
 
நான் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்தபோது, குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்தேன். அதிலிருந்து குஜராத்தில் எந்த தீவிரவாத செயல்களும் நடைபெறவில்லை" என்றார். இந்த பேச்சு மீண்டும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி. மாநில முன்னாள் முதல்வருமான  மாயாவதி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று  கூறுகையில், "அமித் ஷாவின் பேச்சு தேர்தல் விதிமுறையை மீறும்  செயலாகும். இதுபோன்ற பேச்சால் அஷம்கரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்குமுன் தேர்தல் ஆணையம் அவர் மீது எடுத்ததை போல கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையத்திடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.
 
காங்கிரஸ் தலைவர் மீம் அப்சல் கூறுகையில், "அமித் ஷாவுக்கு நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய தடை விதிப்பதுடன் வழக்குப்பதிவு செய்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும்" என்றார்.
 
காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், "இந்து-முஸ்லிம் ஒற்றுமை சின்னமாக அஷம்கர் உள்ளது. பாபர் மசூதி இடிப்பதற்கு முன்பு வரை, இங்கு 1947 முதல் 1992 ஆம் ஆண்டு வரை எந்த கலவரமும் நடந்ததில்லை. அமித்ஷா பேச்சு மிகவும் கண்டனத்துக்குரியது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்