பொதுவெளியில் கொட்டப்படும் பணம் அனைத்தும் கள்ளப் பணமா?
வியாழன், 17 நவம்பர் 2016 (18:22 IST)
சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டப்படும் பணம் அனைத்தும் கள்ளப் பணம் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு திடீரென்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அதிரடியாய் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கோள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுமக்கள் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்களிடம் உள்ள பணத்தை நகையாக மாற்றும் முயற்சியிலும் தீவிரமாக இறங்கினர்.
இதனால், சில தினங்களுக்கு நகை விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து, தங்கம் வாங்குபவர்கள், தங்களது பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு தடாலடியாக அறிவித்தது. மேலும் இது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தது.
இதனால் பலர் ரூபாய் நோட்டுகளை மூட்டையாக மூட்டையாக குப்பைகளில் தூக்கி போட்டு வருவதாகவும், சாலை ஓரங்களில் வீசப்பட்டு வருவதாகவும், கங்கையில் கொட்டப்படுவதாகவும், கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த தகவல் பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளன. ஆனால், இந்த பணம் எல்லாம் கள்ள நோட்டுகள் என்று அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”ரோட்டிலோ, குப்பையிலோ யாரும் செல்லுபடியாகும் நோட்டுகளை கொட்டுவதில்லை. எங்கேனும் ஒரு சிலர் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான இடங்களில் கொட்டப்பட்டு கிடப்பது எல்லாம், கள்ள நோட்டுகளே!
டிசம்பர் 30ஆம் வரை பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், அளவுக்கதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அனைவரும் அதனை வேறு விதமாக புதிய நோட்டுகளாக மாற்றி வருகின்றனர். குப்பையில் கொட்டப்படுவது எல்லாம் செல்லாத கள்ள நோட்டுகளே” என்று கூறியுள்ளார்.