சபரிமலையில் விமான நிலையம்: பக்தர்கள் மகிழ்ச்சி

வியாழன், 20 ஜூலை 2017 (05:33 IST)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிறந்துவிட்டால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருவது உண்டு. 



 
 
வருடம் ஒன்றுக்கு சுமார் 3 கோடி பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு வர பேருந்துகள், ரயில்கள் அதிகம் இருந்தாலும் ஐயப்ப பக்தர்கள் இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தனர்.
 
தற்போது பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நேற்று முதல்வர் பினரயி விஜயன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டயம் மாவட்டத்தின் காஞ்சிரப்பள்ளி என்ற பகுதியில் உள்ள செருவல்லி எஸ்டேட் என்ற இடத்தில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
 
இந்த எஸ்டேட், சபரிமலையில் இருந்து சுமார் 48 கி.மீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையத்திற்காக 2,263 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கி அங்கு விமான நிலையம் அமைக்க கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்