மேக்சிஸ் அதிபரை கைது செய்ய மலேசிய அரசு அனுமதி மறுப்பு

வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (00:08 IST)
ஏர்செல் - மேக்சிஸ் மோசடி வழக்கில் மேக்சிஸ் உரிமையாளரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர அனுமதிக்க முடியாது என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
 

 
கடந்த 2006ஆம் ஆண்டு அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனும் அவருடைய சகோதரான கலாநிதி மாறனும் ஏர்செல் மற்றும் மேக்சிஸ் கம்பெனிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக 2014ல் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் தொடர்புடைய மலேசிய மேக்சிஸ் கம்பெனி உரிமையாளர் அனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது கம்பெனியின் தலைவர் ரால்ப் மார்சல் ஆகியோரை கைது செய்து விசாரிக்க மத்திய புலனாய்வு துறை முடிவு செய்திருந்தது.
 
தற்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மலேசியா குடிமக்கள் என்பதால் மலேசிய அரசிடம் இந்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கான அனுமதி அளிக்க மலேசிய அரசு மறுத்து விட்டது.
 
இது தொடர்பாக மலேசிய உயர் போலீஸ் அதிகாரி காலித் அபுபக்கர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, ”மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் இது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே கைது ஆணையை நிறைவேற்ற முடியாது” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்