மாறன் சகோதரர்களுக்கு சம்மன்; ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் உத்தரவு

ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (14:22 IST)
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், சன் குழுமத்திற்கு முறைகேடான வகையில் பல நூறுகோடி ரூபாய் பணம் கைமாறியது தொடர்பான வழக்கில், மாறன் சகோதரர்கள் ஜூலை 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சி. சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாக குற்றச் சாட்டு எழுந்தது.
 
இதுதொடர்பாக சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் அதன்மீது விசாரணை மேற்கொண்டனர்.அதில், ஏர்செல் பங்குகளை, மேக்சிஸ் நிறுவனத்திற்கு மடைமாற்றியதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ரூ. 742 கோடி ஆதாயம் கிடைத்தது தெரியவந்தது.
 
இந்த பணப்பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர். இதனடிப்படையில் சன் குழுமத்துக்கு சொந்தமான ரூ. 742 கோடி சொத்துகளை முடக்கவும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது.
 
இந்நிலையில் தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்பு அமலாக்கப் பிரிவு குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட 6 பேர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
 
இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோருக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறியிருந்தனர்.
 
இதனிடையே இந்த வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமையன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தயாநிதிமாறன், கலாநிதிமாறன், காவேரி கலாநிதி ஆகியோர் குற்றம் செய்திருக்கிறார்கள் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக நீதிபதி ஓ.பி.ஷைனி கூறினார்.
 
இவ்வழக்கில் கலாநிதிமாறன், தயாநிதிமாறன், காவேரி கலாநிதி மற்றும் தெற்காசிய எப்எம் லிமிடெட் (எஸ்ஏஎப்எல்) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் ஜூலை 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்