ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு: விசாரணை பிப்.6-க்கு ஒத்திவைப்பு

திங்கள், 1 பிப்ரவரி 2016 (21:02 IST)
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 
 
ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் தயாநிதிமாறன், கலாநிதி மாறன் 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதற்கு பின் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
 
2006 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனுக்கு அப்போதைய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் சிபிஐ தயாநிதிமாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தது.
 
ஏர்செல்லின் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றதற்கு பலனாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்ட் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்