2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் பங்குகளை, மேக்சிஸ் நிறுவனத்திற்கு மடைமாற்றியதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ரூ. 742 கோடி ஆதாயம் கிடைத்தது தெரியவந்தது.
இந்த பணப்பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர். அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட 6 பேர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
இதனிடையே இந்த வழக்கு விசாரணை திங்களன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்கும்படி மூவரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.