நடிகர் சல்மான் கானை வைத்து பல நூறு கோடி ரூபாய் சூதாட்டம்

வியாழன், 7 மே 2015 (14:49 IST)
மும்பையில், மது மயக்கில், காரை ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில், நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்படுவரா அல்லது சிறையில் அடைக்கப்படுவார என, அவரை முன்னிலைப்படுத்தி சுமார் 200 கோடி அளவில் சூதாட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடிகர் சல்மான் கான், மும்பை பாந்திராவில் தனது நண்பர்களுடன், மது போதையில் வேகமாக கார் ஓட்டி சென்ற போது, சாலையோரம் தூங்கி கொண்டிருந்த நூருல்லா மெகபூப் செரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது குறித்த வழக்கு மும்பை நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.
 
கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடை பெற்ற இந்த வழக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதியுடன் விசாரணை முடிந்தது. இதையடுத்து, மே 6 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு கூறுவதாக நீதிபதி அறிவித்தார்.  
 
இதனால், மே 6 ஆம் தேதி மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடிகர் சல்மான்கான் பதட்டத்தோடு ஆஜரானார்.  
 
இந்நிலையில், நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்படுவரா அல்லது சிறையில் அடைக்கப்படுவார என, அவரை முன்னிலைப்படுத்தி இணையதளம் மூலம் உள்ளே, வெளியே சூதாட்டம் சுமார் நூறு கோடி ரூபாய் அளவில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
இது குறித்து மகாராஷ்டிரா காவல்துறைக்கு தெரிய வரவே, அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதில் மும்பையின் முக்கியப் புள்ளிகள் சிக்குவார்கள் என கூறப்படுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்